தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கூடலூரில் சம்பளம் வழங்காததால் தனியார் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூரில் 2 மாத நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சில நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்தது. இதை ஏற்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். இருப்பினும் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தபடி இதுவரை சம்பளம் வழங்கவில்லை என கூறி தோட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தோட்ட நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகி குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முகமது கனி உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.