தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
தேவர்சோலையில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
தேவர்சோலையில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை சம்பளம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வருவாய்த் துறையினர், போலீசார் இணைந்து தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து 2 கட்டங்களாக நிலுவை சம்பளம் வழங்குவதாக தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக பணியாற்றினர். இந்த நிலையில் உறுதியளித்தபடி சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் திணறி வருவதாக தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
இதனிடையே வழக்கம்போல் தோட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு வந்தனர். தொடர்ந்து நிலுவை சம்பளம் வழங்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தோட்ட நிர்வாகத்தின் வங்கிக் கணக்கு கர்நாடகாவில் உள்ளதால், அங்கு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் வழங்குவது தாமதமாகி வருவதாக தோட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இதனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாகவும், வருகிற 14-ந் தேதி தொழிலாளர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும் என தோட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.