சாலையோரங்களில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரங்களில் 12 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரங்களில் 12 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 12 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
ஒத்துழைப்பு
அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி தொழிற்சாலைகள் நிறைந்து உள்ளன. அதிக அளவில் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் மாசு அதிகமாக வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சியில் அதிக அளவில் மரங்களை நடவு செய்து வருகிறோம். முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டினோம். தற்போது கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டும் மரக்கன்றுகள் நட உள்ளோம். தூத்துக்குடி மாநகராட்சியை பசுமையான மாநகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் லதா, துணை மேயர் ஜெனிட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.