சிம்ஸ் பூங்காவில் 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனையொட்டி 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
குன்னூர்,
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனையொட்டி 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
2-வது சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன், 2-வது சீசன் நடைபெறுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடக்கிறது. இந்த சீசன்களில் தோட்டக்கலை பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு 2-வது சீசனில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்து செல்கின்றனர். 2-வது சீசனையொட்டி சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சுற்றுலா பயணிகள்
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட ரக விதைகள் வரவழைக்கப்பட்டு, நர்சரியில் விதைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜினியா, பேன்சி, மேரிகோல்டு, லில்லியம், கேலண்டூலா உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. நடைபாதையோரம், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் பூங்கா பணியாளர்கள் நடவு செய்து வருகின்றனர்.
இதற்காக மலர் பாத்திகள் இயற்கை உரமிடப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. நாற்றுகள் நடவு பணி முடிந்த பின்னர் களை எடுப்பது, உரம் இடுவது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 2-வது சீசனான செப்டம்பர் மாதத்தில் நடவு செய்த நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்கும். அப்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.