பிரையண்ட் பூங்காவில் இறுதி கட்டமாக மலர் செடிகள் நடவு செய்யும் பணி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இறுதி கட்டமாக மலர் செடிகள் நடவு செய்யும் பணி நடந்தது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் நகரில் குளு குளு சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி மே மாதம் 3-வது வாரத்தில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல கட்டங்களாக மலர் செடிகள் நடவு செய்யும் பணி இறுதி கட்டமாக ேநற்று தொடங்கியது. தோட்டக்கலைத்துறை துணைஇயக்குனர் பெருமாள்சாமி ஆலோசனையின்பேரில் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் தலைமையில் பூங்கா ஊழியர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேன்சி, பெட்டுனியா, டயான்தஸ், சால்வியா உட்பட 15 வகைகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யபடுகின்றன.
இது குறித்து துணை இயக்குனர் கூறுகையில், வருகிற மே மாதம் நடைபெற உள்ள மலர்கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் சுமார் 2½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இறுதி கட்ட மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் பூக்கள் பூக்க தொடங்கி விடும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த செடிகளில் ஏராளமான பூக்கள் பூத்து குலுங்கினால், அது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.