10 ஆயிரம் பயனாளிகளுக்கு மாடித்தோட்டம் அமைக்க செடிகள்


தினத்தந்தி 12 July 2022 3:34 PM IST (Updated: 12 July 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மாடித்தோட்டம் அமைக்க செடிகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மாடித் தோட்டம் அமைக்க செடிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாடித்தோட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கொரோனா 2-வது அலையின் போது, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கான விதைகள், செடிகளை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தூத்துக்குடி மாவட்டத்திலும் தோட்டக்கலைத்துறை மூலம் செய்படுத்தப்பட்டு வருகிறது.

10,750 பயனாளிகள்

அதன்படி மாவட்டத்தில் மானிய விலையில் பயனாளிகளுக்கு மாடித்தோட்ட செடிகள், காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.675 மானியவிலையில் 750 எண்ணிக்கையிலான மாடித்தோட்ட செடிகள், ஊரகப் பகுதிகளில் ரூ.45 மானிய விலையில் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான காய்கறி விதைகள், ரூ.75 மானிய விலையில் 6 ஆயிரம் எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தளைகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு மாடித்தோட்ட செடிகள் வழங்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story