ஈரோட்டில் 3 மாதங்களில் 109 கடைகளில் 2¼ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-ரூ.3½ லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோட்டில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் 109 கடைகளில் 2¼ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோட்டில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் 109 கடைகளில் 2¼ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று மாநகராட்சி அதிகாரிகள் தினமும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ, பயன்படுத்தப்பட்டு வந்தாலோ அந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ரூ.3½ லட்சம் அபராதம்
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 109 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 2 ஆயிரத்து 345 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 109 கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி அல்லது விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.