மலை அடிவாரப்பகுதியில் குவியும் மதுபாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
மலை அடிவாரப்பகுதியில் குவியும் மதுபாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மலை அடிவாரப்பகுதியில் குவியும் மதுபாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பிளாஸ்டிக்
பல்வேறு விதமான வகைகளில் வண்ண வண்ண நிறங்களில் மனிதனின் அனைத்து செயல்களையும் தன்னகத்தே கட்டுப்படுத்தி வைத்து உள்ளது நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக். பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவான பிளாஸ்டிக் எளிதில் மக்கும் தன்மை அற்றது. மண்ணின் தன்மையையும் அதில் வசித்து வருகின்ற உயிரினங்களுக்கு தீமை புரிவதுடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி இயற்கையை சீரழித்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் இதை பயன்படுத்துவது எளிது ஆனால் அழிப்பது கடினம்.
குறுகிய கால பயன்பாட்டுக்கு பின்பு நம்மால் அலட்சியமாக வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுநீர் கால்வாய், ஏரி, குளம் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து தண்ணீர் தேங்குவதற்கு வழிவகை செய்து தொற்று நோய்கள் உருவாக்கியும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி நிலத்தடி நீர் உயர்வுக்கு தடையை ஏற்படுத்தியும் வருகிறது.
வேதனை
உணவுப் பொருட்களுடன் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள், வனவிலங்குகள் உட்கொள்வதால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறது. மேலும் பிளாஸ்டிக்கை தீ வைத்து எரித்தால் காற்று மாசுபாட்டை உருவாக்கி மண்ணையும் மலடாக்கி அளிக்க முடியாத சக்தியாக பல தலை முறைகள் கடந்தும் மனிதனின் அன்றாட வாழ்க்கையை சீரழித்து வருகிறது.
பிளாஸ்டிக்கை ஒழிப்போம் மண்வளத்தை காப்போம் என்ற சொல்லை நடைமுறைப்படுத்த யாரும் முன் வரவில்லை. இதனால் காய்கறி, ஜவுளி, மருந்து கடைகள், மளிகை மற்றும் உணவு பொருட்கள், தேநீர் கடைகள் என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
ஆக்கிரமிக்கும் கழிவுகள்
அந்த வகையில் ஆனைமலை புலிகள் காப்பக மலைஅடிவாரப் பகுதியை தழுவியவாறு அமைந்துள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மலை அடிவாரப் பகுதியை ஆக்கிரமித்து குவிந்து வருகிறது. அதனுடன் சேர்த்து பரவலாக சிதறிக் கிடக்கும் மது பாட்டில்கள் வனவிலங்குகளின் கால்களை பதம் பார்த்து அவற்றின் உயிருக்கு உலை வைக்கும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலை அடிவாரப்பகுதியில் ஆய்வு செய்து குவியல் குவியலாக குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதை முற்றிலுமாக தடை செய்வதற்கு முன் வரவேண்டும்.
அத்துடன் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து இயற்கைக்கு கேடு விளைவிக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.