கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தாகும் பிளாஸ்டிக் கழிவுகள்


கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தாகும் பிளாஸ்டிக் கழிவுகள்
x

திருப்பூர் மாநகர பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பிய குப்பைகளில் கால்நடைகள் இரை தேடுவதால் அவைகளின் உயிருக்கு கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர்


திருப்பூர் மாநகர பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பிய குப்பைகளில் கால்நடைகள் இரை தேடுவதால் அவைகளின் உயிருக்கு கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள்

ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு அரசு தடை விதித்துள்ளது. திருப்பூர் மாநகர பகுதியில் அதிகாரிகள் இது தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து கடை, வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் இதன் பயன்பாடு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பார்சல் உணவு பொருட்களை கொண்டு செல்வதற்காக பாலித்தீன் பைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு பார்சல் வாங்கி செல்பவர்கள் எச்சில் உணவுகளுடன் பாலித்தீன் பைகளை சாலையோரத்தில் வீசி செல்கின்றனர்.

கால்நடைகளுக்கு ஆபத்து

இதேபோன்று வீடு, வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளும் சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதனால் மாநகரின் பெரும்பாலான வீதிகளில் குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன.

இவ்வாறு மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதால் மண்வளம் பாதிக்கப்படுவது ஒரு புறமிருக்க, குப்பைத்தொட்டிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இரை தேடும்போது பிளாஸ்டிக் கழிவுகளும் அவற்றின் வயிற்றுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளின் உயிரையே பறிக்கும் அபாயம் உள்ளது.

பொறுப்புணர்வு வேண்டும்

திருப்பூர் காங்கயம் ரோடு அருகே புதுக்காடு பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் மாடுகள் சாலையோரத்தில் கிடக்கும் பாலித்தீன் பைகளில் உள்ள எச்சில் உணவுகளை உட்கொள்ளும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. இவ்வாறு கால்நடைகளின் உயிருக்கு வேட்டு வைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே வேளையில் இதன் விபரீதத்தை உணர்ந்து பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கிராமத்து கால்நடைகளுக்கு பசும் புல்வெளிகள் மேய்ச்சல் நிலமாக இருக்கும் நிலையில், நகரத்து மாடுகளுக்கு குப்பை மேடுகள் மேய்ச்சல் நிலமாக இருப்பது காலம் செய்த கோலமோ?.


Related Tags :
Next Story