பிளாஸ்டிக் இல்லா திருப்பத்தூர் மாவட்டம் விழிப்புணர்வு மாரத்தான்
பிளாஸ்டிக் இல்லா திருப்பத்தூர் மாவட்டம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா திருப்பத்தூம் மாவட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. போட்டிகளில் கலந்து கொள்வதற்காக குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 3 கிலோமீட்டர் தூரமும் போட்டி நடத்தப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி கொடி அசைத்து மாராத்தான் போட்டியை தொடங்கிவைத்தார். எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி கலெக்டர் அலுவலகத்திலேயே முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மஞ்சப்பைகளும், மரக்கன்றுகளையும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
உயிரினங்கள் பாதிப்பு
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் இந்த உலகம் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்தது. தற்பொழுது பிளாஸ்டிக் குப்பைகளாக காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் போகிறது. தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் ஆறுகள் மூலமாக கடலிலும், ஏரி, குளங்களிலும் சேர்கிறது.
இது எந்த காலகட்டத்திலும் மக்காது. இதற்கு மைக்ரோ பிளாஸ்டிக் என்று பெயர். பி்ளாஸ்டிக் பொருட்களை எரிக்கின்ற பொழுது டைஆக்சின் என்ற வாயு வெளியாகி, நாம் சுவாசிக்கும் பொழுது உடம்பில் கொழுப்பை சேமித்து வைக்கின்ற அடியோஸ் திசுக்கிளின் இடையே சேமிக்கப்படுகிறது. இது உடம்பில் இருந்து வெளியேற 11 ஆண்டுகள் ஆகும். இந்த பிளாஸ்டிக் மூலம் கடல் வாழ் உயிரினங்கள், நிலத்தில் வாழ்கின்ற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
தவிர்க்க வேண்டும்
தமிழக முதல்-அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். அனைவரும் அதிக அளவில் மரங்களை நட வேண்டும். இதன் மூலம் ஆக்சிஜன் அளவு அதிகமாக கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். உலகில் வெப்பநிலை அதிகமாகி, பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மூழ்கி போகும் அபாயம் ஏற்படும். மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மக்குவதற்கு 1000 ஆண்டுகள் ஆகிறது.
அடுத்த தலைமுறைகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் தீமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். நாம் வாழ்கின்ற பகுதியில் பிளாஸ்டிக்கை அறவே தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுதி மொழி
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், நகர மன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்யா, சங்கீதா, சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தமாட்டேன் என்றும், வீட்டிலும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.