திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் அரைத்து விற்பனை


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் அரைத்து விற்பனை
x

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எந்திரம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் அரைத்து விற்பனை செய்யப்படுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.ராகேஷ் கூறினார்.

வேலூர்

வண்டறந்தாங்கல் ஊராட்சி

காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வண்டறந்தாங்கல் ஊராட்சியில் தலைவராக இருப்பவர் எஸ்.பி.ராகேஷ் எம்.பி.ஏ.பட்டதாரி. இந்த ஊராட்சியில் கிறிஸ்டியான்பேட்டை, சல்லாவூர், சொரக்கால் பேட்டை, வண்டறந்தாங்கல், வண்டறந்தாங்கல் காலனி, லட்சுமிபுரம், கோட்டைமோட்டூர், அக்கிரெட்டிபுதூர், வெங்கடேசபுரம், தென்னமரத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 10 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். வண்டறந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், சல்லாவூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளியும் உள்ளது.

இந்த ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி தலைவர் ராகேஷ் கூறியதாவது:-

புதிய சாலைகள்

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. வண்டறந்தாங்கல் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. இந்திரா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெங்கடேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 15-வது நிதிக்குழு மானியத்தில் சல்லாவூர் கிராமத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

சொரக்கால்பேட்டை பகுதியில் நரிக்குறவர் மக்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு 27 குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஆழ்துளை கிணறு ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு மின்விளக்கு வசதியும் ஊராட்சியின் சார்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வண்டறந்தாங்கல் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் 4 கால்வாய்கள் ரூ.24 லட்சத்திலும், வண்டறந்தாங்கல் காலனியில் இடுகாடு செல்லும் பாதையை சிமெண்டு சாலையாகவும், அம்பேத்கர் தெருவில் சிமெண்டு சாலையும் அமைக்கப்பட்டது. அக்கிரெட்டிப்புதூரில் ரூ.4 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணியும், ரூ.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடேசபுரத்தில் ரூ.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம்

அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில் புது குடியிருப்பு பகுதியில் 2 சிமெண்டு சாலைகளும், கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலை கடையும் கட்டப்பட்டுள்ளது.

அக்கிரெட்டிபுதூரில் காரிய மேடை அமைக்கும் பணியும், வெங்கடேசபுரத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணியும், சல்லாவூரில் சுடுகாடு, இருளர் காலனிக்கு சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வண்டறந்தாங்கல் காலனியில் பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்படும்.

வண்டறந்தாங்கல், வெங்கடேசபுரம், சல்லாவூர் லட்சுமிபுரம், கிறிஸ்டியான்பேட்டை ஆகிய பகுதிகளில் 4 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளது.

பிளாஸ்டிக் அரைக்கும் எந்திரம்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் அரைக்கும் எந்திரம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிளாஸ்டிக் அரைக்கப்பட்டு அந்த துகள்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திட்டப்பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர். வேலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் தான் பிளாஸ்டிக் அரைக்கும் எந்திரம் உள்ளது. ஒன்று வண்டறந்தாங்கல் கிராமத்திலும், மற்றொன்று குடியாத்தம் சீவூரிலும் உள்ளது.

வேலை வழங்க வேண்டும்

வண்டறந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டெல் நிறுவனம் தற்போது இல்லை. அந்த இடத்தில் பெல் நிறுவனம் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. வண்டறந்தாங்கல் ஊராட்சியில் படித்த இளைஞர்கள் பல பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும். மேலும் இளைஞர்கள் உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story