பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை
கர்நாடக மாநிலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளுக்கு புகார்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்து தேன்கனிக்கோட்டையில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், இளநிலை உதவியாளர் தேவராஜ், துப்புரவு ஆய்வாளர் நடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் தேன்கனிக்கோட்டை மண்டி தெரு பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடைக்கு வந்த சரக்கு வேனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் சரக்கு வேன் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த சம்பங்கி என்பது தெரிந்தது.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மேலும் இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மளிகை உள்ளிட்ட கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள், சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சம்பங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.