கிராமங்களில் குறையாத பிளாஸ்டிக் பயன்பாடு
கிராமங்களில் குறையாத பிளாஸ்டிக் பயன்பாடு
போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையாத நிலையில் ரோட்டோரங்களில் மலை போல குப்பைகள் குவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் தடை
விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் வியாபார வளர்ச்சிக்கு பல வகைகளில் உதவியது.ஆனால் காலப்போக்கில் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் மற்றும் தீயில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்கும், சுற்றுச் சூழலுக்கும் எமனாகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு எளிதில் மக்கும் தன்மையற்ற 14 வகையான பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.மேலும் கடந்த ஜூலை முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை
இத்தகைய அறிவிப்புகளின் தாக்கம் எதுவும் இல்லாமல் மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.இதனால் காரத்தொழுவு உள்ளிட்ட ஒருசில ஊராட்சிப் பகுதிகளில் ரோட்டோரங்களில் குப்பைக் கழிவுகளுடன் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது.இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் மழைக் காலங்களில் மழைநீருடன் கலந்தும், காற்றில் பறந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் விளைநிலங்களில் சென்று சேர்க்கிறது.இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அத்துடன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குப்பையிலுள்ள காய்கறிகள் மற்றும் உணவுக் கழிவுகளைத் தின்ன முயற்சிக்கும் போது பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றுக்குள் சென்று வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுகின்றன.சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
நடவடிக்கை
எனவே ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் முறையாக அப்புறப்பபடுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.தமிழக அரசின் தடை அமலுக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் அதிகாரிகள் வேகம் காட்டியதால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மஞ்சப்பை, வாழை இலை, பாக்கு மட்டை போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்தது.தொடர் நடவடிக்கைகள் மூலம் மீண்டும் அத்தகைய நிலையை உருவாக்க வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.