மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை துரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சித்திரை கனி, பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டு, எனது குப்பை எனது பொறுப்பு, குப்பையில்லா நகரங்களை உருவாக்குவோம். என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும், பொறுப்பும். பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது நகரத்தின் தூய்மைக்கான முதல் காரணம் என்பதை நான் நம்புகிறேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட விடமாட்டேன். குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான முயற்சியில் நான் பங்கேற்பதுடன், எனது குடும்பத்தாரையும், சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தின் தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்ற தூய்மைக்கான உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.