பிளம்ஸ் பழ விளைச்சல் குறைவு;விவசாயிகள் ஏமாற்றம்
கொடைக்கானலில் பிளம்ஸ் பழ விளைச்சல் குறைந்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிளம்ஸ் பழங்கள்
'மலைகளின் இளவரசி' கொடைக்கானல் என்றவுடன் நினைவுக்கு வருவது பிளம்ஸ் பழங்களாகும். மலைப்பகுதியில் அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, அடுக்கம் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பிளம்ஸ் மரங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விளைச்சல் அதிகரித்து மரங்களில் பிளம்ஸ் பழங்கள் காய்த்துக் குலுங்கும்.
சீசன் காலங்களில் இப்பழங்கள் விற்பனைக்கு வருவதால் சுற்றுலா பயணிகளும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இதன் விளைச்சல் குறைந்து வந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு இதுவரை பழங்கள் சரியாக காய்க்க தொடங்கவில்லை. இதனால் பழ விளைச்சலில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
10 சதவீதம் விளைச்சல்
இதுகுறித்து நாயுடுபுரத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக பிளம்ஸ் மரங்களை நடவு செய்து பராமரித்து விற்பனை செய்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு மரத்திலும் சுமார் 300 கிலோ முதல் 500 கிலோ வரை பிளம்ஸ் பழங்கள் காய்க்கும். பழ சீசனின் ஆரம்பத்தில் கிலோ ரூ.200-க்கு விற்கும். பின்னர் வரத்து அதிகரிக்கும் போது கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்படும். மேலும் இப்பகுதியில் விளையும் பிளம்ஸ்கள் 60 சதவீதம் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படும். அத்துடன் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பினோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இதன் விளைச்சல் படிப்படியாக குறைந்து இந்த ஆண்டு 10 சதவீதம் கூட காய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளார்கள். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றார்.
இதனிடையே பிளம்ஸ் பழங்களை பழக்கடைகளில் காணாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் பிளம்ஸ் பழங்களின் உற்பத்தி குறைந்தது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.