25 ஆயிரத்து 574 பேர் எழுதினார்கள்
திருப்பூர்:
பிளஸ்-1 பொதுத்தேர்வை நேற்று 25 ஆயிரத்து 574 பேர் எழுதினார்கள். இயற்பியல், பொருளாதாரம் பாடத்தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
25 ஆயிரத்து 574 பேர் எழுதினார்கள்
பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இயற்பியல் தேர்வுக்கு 13 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 12 ஆயிரத்து 899 பேர் எழுதினார்கள். 387 பேர் எழுதவில்லை. பொருளாதாரம் பாடத்தேர்வுக்கு 13 ஆயிரத்து 143 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் 12 ஆயிரத்து 256 பேர் எழுதினார்கள். 887 பேர் எழுதவில்லை. கணினி தொழில்நுட்பம் பாடத்தேர்வுக்கு 481 பேர் விண்ணப்பித்து 419 பேர் எழுதினார்கள். 62 பேர் எழுதவில்லை. மொத்தத்தில் 26 ஆயிரத்து 910 பேர் விண்ணப்பித்து 25 ஆயிரத்து 574 பேர் எழுதினார்கள். 1,336 பேர் தேர்வு எழுதவில்லை.
இயற்பியல், பொருளாதாரம் பாடத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மாணவர் ஹரி:-
பொருளாதாரம் பாடத்தேர்வு எளிதாக இருந்தது. 1 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 3 மதிப்பெண் வினாக்கள் சிறிது கடினமாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் கடினமாக இருந்தது. பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் வந்ததால் 95 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள்.
மாணவர் ஆதில்:-
பொருளாதாரம் பாடத்தில் 3 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. பாடத்தின் உட்புறம் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டது. முக்கிய வினாக்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்த வினாக்கள் வந்தன. 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
எளிதில் தேர்ச்சி பெறலாம்
மாணவர் அஸ்லம்:-
பொருளாதாரம் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. 3 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து வந்தன. எளிதாக தேர்ச்சி பெறலாம்.
மாணவி தமிழரசி:-
பொருளாதாரம் பாடத் தேர்வில், திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் வந்ததால் எளிதாக இருந்தது. ஆசிரியர் தெரிவித்த முக்கிய வினாக்கள் பெரும்பாலும் வந்தன. இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
மாணவி அட்சயா:-
பொருளாதாரம் பாடத்தேர்வு மிக எளிதாக இருந்தது. எதிர்பார்த்த வினாக்கள் வந்தன. அனைத்துக்கும் விடையளித்து விட்டேன். 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைவரும் எளிதில் தேர்ச்சி பெற முடியும்.
மாணவி கீர்த்தனா:-
பொருளாதார பாட தேர்வில் 5 மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் கடினமாக இருந்தது. மற்றவை எளிதாக இருந்தது. படித்த வினாக்கள், முக்கிய வினாக்கள் வந்ததால் 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
இயற்பியல் தேர்வு எளிது
மாணவி ஜோஷிதா:-
இயற்பியல் பாடத்தேர்வில் 1 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 2 மதிப்பெண் வினாக்கள் சிறிய அளவில் விடையளிக்கும் வகையில் இருந்தது. இதனால் நேரம் அதிகம் கிடைத்தது. திருப்புதல் தேர்வு வினாக்கள் வந்தன. ஆசிரியர் தெரிவித்த முக்கிய வினாக்கள் வந்தன. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
மாணவி தேவஸ்ரீ:-
இயற்பியல் பாடத்தேர்வு எளிதாக இருந்தது. பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் அப்படியே வந்தன. முக்கிய வினாக்கள், திருப்புதல் தேர்வு வினாக்கள் வந்ததால் பயமின்றி விடையளிக்க முடிந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் மிக எளிதாக இருந்தது.