ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிணமாக கிடந்த மாணவர்
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் ரெயில்வே கேட் அருகே நேற்று காலையில் பள்ளி மாணவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
தொடர்ந்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதம்நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் சதீஷ் (வயது 16) என்பதும், பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும் தெரியவந்தது.
ஜெயசீலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகன்கள். அதில் 2-வது மகன் தான் சதீஷ். மூத்த மகன் அதே பகுதியில் ஜே.சி.பி. ஆபரேட்டராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் செல்போன் காணாமல் போனது. இதனால் அவர் புதிய செல்போன் வாங்கி தரக்கேட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சதீஷ் ரெயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சோகம்
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.