மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலி
சுல்தான்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
பிளஸ்-1 மாணவர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மகன் வெற்றிவேல் (16) செஞ்சேரிமலை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். குமார் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே அய்யம்பாளையத்தில் புதிதாக வீடு கட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்தினருடன் குடியேறினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் குமார் தனது பழைய வீட்டில் பொருத்தி இருந்த மின்மீட்டரை கழற்றி புதிய வீட்டின் சுவரில் எலெக்ட்ரீசியன் உதவியுடன் பொருத்தி கொண்டிருந்தார்.
மின் வினியோகம் தடைபட்டால், வீட்டில் அவசர பயன்பாட்டுக்காக யு.பி.எஸ். வைக்கப்பட்டு இருந்தது. அதன் சுவிட்ச்சை போர்டில் இருந்து கழற்றி கீழே வைத்து விட்டு, மின் பொருட்கள் வாங்குவதற்காக குமார் செஞ்சேரிமலை பகுதிக்கு சென்றார். தொடர்ந்து எலெக்ட்ரீசியனும் வெளியே சென்றதாக தெரிகிறது.
மின்சாரம் தாக்கியது
பின்னர் மாலையில் பள்ளி முடிந்து வெற்றிவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது மின் விளக்குகள் எரியாமல் இருப்பதை பார்த்தார். வீடு இருட்டாக இருந்ததால், வெற்றிவேல் யு.பி.எஸ்.-சில் கழற்றி வைத்திருந்த சுவிட்ச்சை போட்டு உள்ளார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து கீழே மயங்கி விழுந்தார். பின்னர் வீடு திரும்பிய குமார், மகன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து உறவினர்கள் வெற்றிவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், வெற்றிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.