பாம்பு கடித்து பிளஸ்-1 மாணவி சாவு
விக்கிரவாண்டி அருகே பாம்பு கடித்து இறந்த பிளஸ்-1 மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விக்கிரவாண்டி
பிளஸ்-1 மாணவி
விக்கிரவாண்டி அடுத்த தொரவி கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகள் சாருமதி(வயது 16). இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை பிரகாஷ் இறந்து விட்டதால் தாய் சுகுணா கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்தார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வயலுக்கு சென்ற சாருமதியை விஷப் பாம்பு கடித்துவிட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூாி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சாருமதி சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து தாய் சுகுணா மற்றும் உறவினர்கள், கிராமமக்கள் கதறி அழுதனர்.
உடலை வாங்க மறுப்பு
மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவ கல்லூரி முன்பு திரண்டு முறையான சிகிச்சை இல்லாததால் தான் சாருமதி இறந்ததாக கூறி சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுபற்றிய தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிவிநாயகம், தொரவி ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சென்ற அவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து பிண அறையை முற்றுகையிட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று சாமாதனம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.