பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மணப்பாறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிராம மக்கள் மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிராம மக்கள் மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
பிளஸ்-1 மாணவி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அழகிரெட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ஜெயா (வயது 16). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு 12-ம் வகுப்பிற்கு செல்ல இருந்தார்.
தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த அந்த மாணவியை சந்திப்பதற்காக மணப்பாறை அருகே உள்ள செவலூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கிராம மக்கள் அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
தற்கொலை
இதற்கிடையே மாணவியின் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து வெளியில் சென்று இருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜெயா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவி ஜெயாவின் உடலை நேற்று மதியம் பிரேத பரிசோதனைக்கு திருச்சிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜெயா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை சந்திக்க வந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.