பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து
குன்னூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்,
குன்னூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வகுப்பறையில் தகராறு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோணியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பிளஸ்-1 வகுப்பில் 50 பேர் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றது. பள்ளி இடைவேளையின் போது, பிளஸ்-1 வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் வகுப்பறையில் உள்ள இருக்கையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றவே கைகலப்பாக மாறியது.
கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவர் பென்சில் சீவ பயன்படுத்தும் கத்தியால், மற்றொரு மாணவரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் கை மற்றும் முதுகில் மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை அறிந்த ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் மாணவருக்கு முதுகில் 7 தையல் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வகுப்பறையில் பேசி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.