155 மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் 155 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலத்தில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் 155 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலத்தில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பிளஸ்-2 தேர்வுக்காக பள்ளி மாணவ,மாணவர்களுக்கு 149 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்களும் என மொத்தம் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 325 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 830 மாணவர்களும், 20 ஆயிரத்து 443 மாணவிகளும் என 39 ஆயிரத்து 273 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத டேபிள், சேர் அமைக்கப்பட்டு அவர்களுடைய பதிவெண் எழுதப்பட்டு மையங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
கோவிலில் சாமி தரிசனம்
தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு சென்றனர். மாணவ, மாணவிகளில் பலர் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்வு எழுத புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது.
நேற்று காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. முன்னதாக காலை 10 மணி முதல் 10.10 வரை கேள்வி தாளை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் நியமனம்
பிளஸ்-2 ேதர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களை கொண்டு 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் மொத்தம் 8,601 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவிகளுக்கு முதன்மை கண்காணிப்பாளர் இருதயமேரி அறிவுரை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே, சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வுகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறும் ேபாது, 'பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எந்தவித பதற்றமும் இல்லாமம் தைரியமாக தேர்வெழுத வேண்டும். ஒரு தேர்வை நன்றாக எழுதிவிட்டோம் என்று மகிழ்ச்சி அடையவோ, ஒரு தேர்வை நன்றாக எழுதவில்லை என்று கவலைப்படவோ கூடாது. முடிந்தவரை அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். பெற்றோர்களும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்களை தயார்படுத்த வேண்டும்' என்றார்.