155 மையங்களில் பிளஸ்-2 தேர்வு முடிந்தது


155 மையங்களில் பிளஸ்-2 தேர்வு முடிந்தது
x

சேலம் மாவட்டத்தில் 155 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நேற்று முடிந்தது. இதனால் மாணவ, மாணவிகள் ‘செல்பி’ எடுத்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 155 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நேற்று முடிந்தது. இதனால் மாணவ, மாணவிகள் 'செல்பி' எடுத்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 155 மையங்களில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்தது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இருந்து 18 ஆயிரத்து 830 மாணவர்களும், 20 ஆயிரத்து 443 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 273 பேர் தேர்வு எழுதினர். ஆனால் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்கள் தேர்வையும், இதர பாடங்களுக்கான தேர்வையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் எழுதவில்லை.

இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு இறுதி நாளான நேற்று வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தவுடன் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியே வர தொடங்கினர்.

செல்பி எடுத்த மாணவிகள்

சேலம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கொடுத்தனர். பின்னர் அவர்கள், தங்களது தோழிகளுடன் செல்போனில் செல்பி எடுத்தும், குரூப் போட்டோ எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு முடிந்து வெளியே வந்த பிளஸ்-2 மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் கேக், சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனிடையே, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதன்பிறகு மே 5-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், பிளஸ்-1 வகுப்புக்கான தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.


Next Story