பிளஸ்-2 தேர்வு நாளை தொடக்கம்மாவட்டத்தில் 24,918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


பிளஸ்-2 தேர்வு நாளை தொடக்கம்மாவட்டத்தில் 24,918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x

தேர்வு நாளை தொடக்கம்

ஈரோடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் பயன்படுத்தப்படும் வினாத்தாள்கள் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 460 மாணவ-மாணவிகளும், 458 தனித்தேர்வர்களும் என மொத்தம் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களுக்கான வினாத்தாள்கள் கடந்த 7-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பதிவு எண்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தனித்தேர்வர்களுக்கு கூடுதலாக 3 தேர்வு மையங்களும் உள்ளன. அங்கு இருக்கைகள் வரிசையாக போடப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மேஜையின் மீது மாணவ-மாணவிகளின் பதிவு எண்களை ஒட்டும் பணியும் நேற்று நடந்தது.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் மாணவிகள் பதிவு எண்களை மேஜையின் மீது ஒட்டும் பணியில் ஆசிரியைகள் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஒரு மேஜைக்கு 2 பேர் உட்காரும் வகையில் பதிவு எண் எழுதப்பட்ட ஸ்டிக்கரை மேஜையின் மீது ஆசிரியைகள் ஒட்டினார்கள்.

12 பறக்கும் படைகள்

இதேபோல் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளது. மேலும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? என்று தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story