பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி -20-வது இடம் பிடித்தது
பிளஸ்-2 தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் 20-வது இடத்தை பிடித்தது.
ஊட்டி
பிளஸ்-2 தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் 20-வது இடத்தை பிடித்தது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி, கடந்த மாதம் 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருந்தன.
கடந்த 5-ந் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
93.85 சதவீதம் தேர்ச்சி
மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 3,246, மாணவர்கள் 3,743 மாணவிகள் என 6,989 பேர் எழுதினர்.
இதில் 2,945 மாணவர்கள், 3,614 மாணவிகள் என 6559 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் 93.85 சதவீத தேர்ச்சி பெற்று நீலகிரி மாவட்டம் 20-வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 92.54 சதவீதம் தேர்ச்சி பெற்று 24- வது இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
6 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 34 அரசு பள்ளிகளில் 2,713 பேர் தேர்வு எழுதினர். இதில், 2371 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் 87.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நீலகிரி மாவட்ட அரசு மாதிரி பள்ளி, கக்குச்சி, மேலூர் ஒசஹட்டி, சோலூர், தாவணி, எமரால்டு ஆகிய 6 அரசு பள்ளிகள், குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி, 20 தனியார் பள்ளிகள், 5 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட மொத்தமுள்ள 85 பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதே போல் இணையதளம் மூலமாகவும் பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
.