வீரபாண்டியில் சோகம் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


வீரபாண்டியில் சோகம்  பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

வீரபாண்டியில் தோல்வி அடைந்த வேதனையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

பனமரத்துப்பட்டி,

பிளஸ்-2 மாணவி

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பிச்சம்பாளையம் கிராமம் மேல் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). தறி தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி (38). இவர்களுக்கு ரூபாவதி (20), தாமரைச்செல்வி (17) என்ற 2 மகள்களும், நிஷாந்த் (16) என்ற மகனும் இருந்தனர். ரூபாவதி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

தாமரைச்செல்வி வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு கணித உயிரியல் பாடப்பிரிவும், நிஷாந்த் அதே பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்துள்ளனர்.

3 பாடங்களில் தோல்வி

இந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வந்தவுடன் அது குறித்து தங்களுக்கு தெரிவிக்குமாறு கூறிவிட்டு, ராஜா, ரேவதி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள அக்காள், தம்பி பள்ளிக்கு சென்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் 3 பாடங்களில் தாமரைச்செல்வி தோல்வி அடைந்தார். அதாவது இயற்பியல் பாடத்தில் 36 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 38 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 19 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். செய்முறை தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நிலையில் எழுத்து தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றதே மாணவியின் தோல்விக்கு காரணம் ஆகும்.

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த தாமரைச்செல்வி தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் கதவை பூட்டிவிட்டு, விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். அக்காள் 3 பாடங்களில் தோல்வி அடைந்ததை அறிந்த நிஷாந்த் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது அக்காள் தூக்குப்போட்டு தொங்குவதை பார்த்து அவன் சத்தம் போட்டான்.

இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தூக்கில் தொங்கிய தாமரைச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதை அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற ராஜா மற்றும் ரேவதி, தாமரைச்செல்வியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story