கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
தக்கலை:
தக்கலை அருகே பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-2 மாணவி
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு ஆலாடிகுண்டு பகுதியை சேர்ந்தவர் தாவூத் (வயது40). இவர் வடசேரி சந்தையில் தெருவோர கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரஜீலா பாத்திமா. இவர்களுக்கு தற்ஜா பாத்திமா (17) உள்பட 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகளான தற்ஜா பாத்திமா அழகியமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 4 நாட்களாக மன குழப்பத்தில் இருந்தார். மேலும் வீட்டில் சரியாக சாப்பிடுவதில்லை.
இந்தநிலையில் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அவருக்கு அம்மா ரஜீலாபாத்திமா சாப்பாட்டை எடுத்து மேசையில் வைத்துவிட்டு குளியலறைக்கு சென்றார்.
கிணற்றில் குதித்தார்
அப்போது மாணவி தற்ஜாபாத்திமா திடீரென வெளியே வந்து வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்தார். சத்தம் கேட்டு தாயார் விரைந்து வந்து கிணற்றில் பார்த்த போது மகள் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தாயார் சத்தம் போட்டு அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களில் ஒருவர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மாணவியை மீட்க முயன்றார். ஆனால் பாதி வழியில் சென்ற போது கிணற்றில் இருந்த விஷ வாயு தாக்கி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் மேலே வந்தார்
பிணமாக மீட்பு
இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்தனர். அவர்கள் பெரிய வலை கூடையை கிணற்றுக்குள் இறக்கி மாணவியை தூக்கி மேலே கொண்டு வந்தனர். அப்போது மாணவி இறந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.
சோகம்
விசாரணையில் இந்த மாணவி பிளஸ்-1 வரை வேறொரு பள்ளியில் படித்து வந்தார். இந்த ஆண்டு அங்கிருந்து மாற்றப்பட்டு அழகியமண்டபத்தில் உள்ள பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்தது தெரிய வந்தது. அதன்பின்பு கடந்த 4 நாட்களாக சரியாக சாப்பிடாமல் வந்துள்ளார். இதனால் அவரை சாப்பிடும்படி தாயார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை ெசய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.