பிளஸ்-2 மாணவர் மர்ம சாவு; உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
சேலத்தில் பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெரு முதல் கிராசை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் கிரி (வயது 18). இவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு மணியனூரில் உள்ள அக்காள் வீட்டுக்கு சென்று உள்ளார். கடந்த 7-ந்தேதி வீட்டில் மாணவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார்.
இதையடுத்து அக்காள் மற்றும் உறவினர்கள், கிரியை மீட்டு அங்கு உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவரின் உடலை சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
போதை ஊசி பயன்படுத்தினாரா?
இந்த நிலையில் போதை ஊசி செலுத்தியதால் மாணவர் இறந்து விட்டதாக அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் அசோகனுக்கு புகார் வந்தது. இதையடுத்து மாணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் சேலம் தெற்கு தாசில்தார் செல்லத்துரையிடம் மனு அளித்தனர். இதையடுத்து தாசில்தார் செல்லத்துரை தலைமையில், போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், ஆனந்தி, அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் முன்னிலையில் நேற்று மதியம் கிரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அங்கேயே அரசு டாக்டர்கள் மாணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
பரபரப்பு
இது குறித்து போலீசார் கூறும்போது, 'போதை ஊசி செலுத்திக்கொண்டதால் மாணவர் இறந்துவிட்டதாக வந்த புகாரின் பேரில் கிரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மாணவரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
ஆய்வு அறிக்கை வந்த பிறகுதான் மாணவர் எவ்வாறு இறந்தார்? என்பது தெரிய வரும்' என்றார்கள். மாணவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.