24 ஆயிரத்து 947 பேர் எழுதினர்
பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வை 24 ஆயிரத்து 947 பேர் எழுதினர். 977 பேர் தேர்வு எழுத வரவில்லை. 1 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் மட்டும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 213 மேல்நிலைப்பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 924 பேர் விண்ணப்பித்தனர். 93 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்களாக 1,608 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அச்ச உணர்வு
பலருக்கு ஆங்கிலத்தேர்வு என்பது சிரமம் என எண்ணி வந்தார்கள். குறிப்பாக மாணவர்களுக்கு அச்ச உணர்வு இருந்தது. ஆனால் நேற்று நடந்த ஆங்கிலத்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். மொத்தம் 24 ஆயிரத்து 947 பேர் தேர்வு எழுதினார்கள். 977 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு நேற்று நடைபெற்றது. ஆங்கிலத்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மாணவி காயத்திரி:-
1 மதிப்பெண் வினாக்கள் மட்டும் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. இதனால் சற்று கடினமாக இருந்தது. 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. எளிதில் தேர்ச்சி பெற முடியும்.
மாணவி யாஸ்மின்:-
1 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. மற்ற வினாக்கள் அனைத்தும் பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் தான். எளிதாக விடையளிக்க முடிந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். எதிர்பார்த்த வினாக்கள் வந்தது மகிழ்ச்சி. ஆசிரியர்கள் தெரிவித்த முக்கிய வினாக்கள் வந்திருந்தது. அனைவரும் தேர்ச்சி பெற முடியும்.
மாணவி மதுமிதா:-
ஐந்து 1 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. மற்ற வினாக்கள் பாடத்தின் பின்புறம் கேட்கப்பட்ட வினாக்கள் தான். எளிதில் விடையளிக்க முடிந்தது. எதிர்பார்த்த வினாக்கள் வந்தது. தேர்ச்சி பெறுவது எளிது. 70 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
மாணவி கீர்த்திகா:-
1 மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. 5 மதிப்பெண், 3 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் ஆகியவை பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் அப்படியே கேட்கப்பட்டது. இதனால் தைரியமாக எளிதாக விடையளிக்க முடிந்தது. 1 மதிப்பெண் வினாக்கள் பாடத்துக்கு உள்ளே இருந்து கேட்கப்பட்டதால் விடையளிக்க சிரமமாக இருந்தது. 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிடுவேன்.
மாணவர் அஸ்வின் சுபையா:-
ஆங்கில பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. புத்தகத்தை முழுமையாக படித்திருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விட்டேன். 1 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். தேர்வு எழுதியவர்கள் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் வினாக்கள் அமைந்திருந்தது.