'குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பாவின் 100வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை!


குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 100வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை!
x

குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்ட 'குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பாவின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது,

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் என்ற ஊரில், 1922ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர், அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி. தனது 13-ம் வயதிலேயே கவிதை இயற்றும் திறன் கைவசப்பெற்றார்.

1961-ல் அவர் வெளியிட்ட 'சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, 'குழந்தைக் கவிஞர்' எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1982-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினால் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்று கவுரவிக்கப்பட்டார்.

குழந்தைகளுக்காக இவர் 50-க்கும் மேலான நூல்களையும், ஆயிரத்துக்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். 'நம் நதிகள்' என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 100வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "திரு அழ. வள்ளிப்பாவிற்கு அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவர் மிகச் சிறந்த எழுத்துவன்மை மற்றும் கவிப்புலமை பெற்றிருந்தார்.

மேலும் குழந்தைகளிடையே வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்தியதற்காகவும் போற்றப்படுகிறார்.அவரது படைப்புகள் இன்றளவிலும் பலரை ஊக்கப்படுத்தி வருகின்றன." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story