பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு கூட்டம்
பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, கலெக்டர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, கலெக்டர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி வருகை
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார். இதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பிரதமர் தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு அன்றைய தினம் மதியம் வருகிறார். அதன்பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அதன்பின்னர் விமானத்தில் புறப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார்.
ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை சூப்பிரண்டு ஜிதேந்திரா சிங் பாக்சி தலைமையில் கலெக்டர் அனிஷ் சேகர், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேசுவரன், விமான நிலைய இயக்குனர் பாபுராஜ், துணை பொது மேலாளர் ஜானகிராமன், ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை ஆணையர் சீனிவாச பெருமாள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.