செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.
6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. ஜூன் 19-ந்தேதியன்று டெல்லியில் இந்திராகாந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு 75 முக்கியமான இடங்கள் வழியாக பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்திருக்கிறது.
முதல்முறையாக...
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற உள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் காணொலி காட்சி முறையில் நடத்தப்பட்டன. 1924-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்க போட்டிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகு, தனிப்பட்ட முறையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது தொடங்கப்பட்டது. அதே 1924-ம் ஆண்டில் பாரீசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது, சர்வதேச சதுரங்க போட்டிகளுக்கான கூட்டமைப்பு பிடே, முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பாரீசிலேயே நடத்தியது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அதிகாரப்பூர்வமற்றவையாக கருதப்பட்டன. 1927-ம் ஆண்டு முதல்முறையாக அதிகாரப்பூர்வமான சர்வதேச சதுரங்க போட்டிகள் லண்டனில் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் வரை இந்த போட்டிகள் முறையான இடைவெளியின்றி அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த போதிலும், 1950-ம் ஆண்டுக்குபிறகு, பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலில் பெலாரசில் உள்ள மின்ஸ்க்கில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அது ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர், உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பை தொடர்ந்து, சர்வதேச சதுரங்க போட்டிகளின் கூட்டமைப்பு, இந்த போட்டிகள் இந்தியாவின் சென்னையில் நடைபெறும் என்று இறுதியாக அறிவித்தது.
சென்னையில் நடத்தப்படுவது ஏன்?
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களை தவிர்த்து சென்னையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதற்கும் காரணம் உள்ளது. இந்தியாவில் சென்னையில்தான் 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் ஒற்றை இலக்க அளவிலேயே கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கின்றனர். செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதன் காரணமாக சென்னையில் இந்த போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக பிடே அறிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கண்கவர் விளையாட்டு அரங்குகளில் இந்த சர்வதேச செஸ் போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலும் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களில் செஸ் போர்டில் உள்ள கருப்பு-வெள்ளை நிறங்கள் வரையப்பட்டுள்ளன. செஸ் போட்டிகளின் காய்கள் வடிவிலான உருவங்களும் ஆங்காங்கே பெரிய அளவில் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. செஸ் விளையாட்டின் குதிரை காய் இந்த போட்டியின் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. இது தம்பி என்று அழைக்கப்படுகிறது.
பிரதமர் தமிழகம் வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இரவு 7.30 மணி வரை பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறார். அப்போது அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவை முடித்துவிட்டு மதியம் 11.50 மணி அளவில் சென்னையில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.
மோடி தொடங்கி வைக்கிறார்
நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து மோடி உரையாற்றுகிறார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தமிழகத்தின் தொன்மை மிகுந்த கருப்பு-வெள்ளை கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள் தொடர்பான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 36 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், மு.க.ஸ்டாலின் சிரிப்பது போன்று தொடக்கத்தில் வருகிறது. இதையடுத்து செஸ் காய்கள் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.