பா.ம.க. பொதுக்கூட்ட மேடையில் வேட்டியை மடித்து கட்டி மண்வெட்டியை கையில் எடுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்


பா.ம.க. பொதுக்கூட்ட மேடையில் வேட்டியை மடித்து கட்டி மண்வெட்டியை கையில் எடுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x

பா.ம.க. பொதுக்கூட்ட மேடையில் வேட்டியை மடித்து கட்டி மண்வெட்டியை கையில் எடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நீர், நிலம், விவசாயம் காப்போம் விளக்க பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் வீரவாள் பரிசு வழங்கினர். இதை வாங்க மறுத்த அவருக்கு மண்வெட்டி பரிசாக வழங்கப்பட்டது. இதை வாங்கிய அவர், இளைஞர்கள் கத்தியை எடுக்காமல், மண்வெட்டியை எடுங்கள். இது தான் நமது ஆயுதம் என்றார்.

எப்போது கோபம் வரும்

தொடர்ந்து அவர் பேசுகையில், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை பார்த்து, சென்னையில் இருக்கும் எனக்கு ஆத்திரம், கோபம் வருகிறது. இந்த மண்ணை, விவசாயத்தை அழிக்கிறார்களே என்று எனக்கு கோபம் வருகிறது. ஆனால் இந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு எப்போது தான் கோபம் வரப்போகிறது.

வட இந்தியாவில் இருந்து வந்த ஒருவன் உங்களை அழிக்கிறான். வேலை கொடுக்கவில்லை. நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி, நிலக்கரி எடுத்து, நிலத்தை பாலைவனமாக மாற்றி வருகிறார்கள். ஆனால் இதுபற்றி தெரிந்தும், எங்கேயோ நடப்பதுபோல் இருக்கிறீர்கள். நீங்கள் வந்தாலும், வராவிட்டாலும் நான் போராடி ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டேன் என்றார்.

மண்வெட்டியை கையில் எடுத்தார்

மேலும் அவர் பேசுகையில், அன்புமணி என்றால், டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் என்று நினைக்கிறார்கள். நான் வேட்டியை மடித்து கட்டினால் என்று கூறியபடி, தான் அணிந்திருந்த வேட்டியை மடித்து கட்டினார். இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் உணர்ச்சி வசப்பட்டனர். பின்னர் இதுதான் எங்கள் ஆயுதம் என்று கூறிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், மண்வெட்டியை கையில் எடுத்து தொண்டர்கள் மத்தியில் காண்பித்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.


Next Story