தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் கலந்து கொண்டார்.

பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் இன்று பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ம.க. தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணிராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பின்தங்கிய மாவட்டம்

ஒரு தொழிற்சாலைகள் கூட இல்லாத மிக மிக பின்தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.

கடை கோடியில் உள்ள ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்திக்க வர வேண்டும் என்றால் சுமார் 120 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டி உள்ளது.

நீண்ட காலமாக பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய மாவட்டங்களை பிரிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

செல்வாக்கு

திருவண்ணாமலை மாவட்டம் போல் கடலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற பல பெரிய மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வின் முன்னணி பிரமுகர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதால் பெரிய மாவட்டங்களை பிரித்து விட்டால் தங்களுடைய செல்வாக்கு குறைந்துவிடும் என்ற காரணத்திற்காகவே தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரிக்க விடாமல் தடுக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.

முதல்- அமைச்சருக்கு 3 கோரிக்கை

மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு சுரங்கம் தோண்ட ஏலம் விட்டு இருப்பதாகவும், நிலம் எடுக்க போகிறார்கள் என நாம் அறிக்கை விடுத்தவுடன் பா.ஜ.க.வை சேர்ந்த அண்ணாமலை மத்திய மந்திரியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

அதற்கு மத்திய மந்திரி நிலக்கரி எடுப்பதற்கு சுரங்கம் தோண்டுவதற்காக விடப்பட்ட ஏலம் பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறோம் என ட்வீட் செய்கிறார். நிலக்கரி சுரங்கம் வராது என்று மத்திய மந்திரி கூறவில்லை. அதற்கு மாறாக ஏல பட்டியலில் இருந்து விலக்கி விடுகிறோம் என்று மட்டுமே ட்வீட் செய்துள்ளார்.

அதற்குள் எங்களுக்கு கிடைத்த வெற்றி, எங்கள் முதல்- அமைச்சருக்கு கிடைத்த வெற்றி என பேசி வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் தமிழகத்தில் 6 நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.

என்.எல்.சி. 1 ஏ மற்றும் 2 ஆகியவற்றிற்காக நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தம் மற்றும் 66 ஆண்டு காலமாக என்.எல்.சி. நிறுவனத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி. குழுவின் மூலம் 3 மாதத்தில் ஆய்வு அறிக்கை அரசுக்கு அளித்து பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன். இவை அனைத்திற்கும் தீர்வு வராவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஒரு நாளில் முடியாது அடுத்தடுத்த போராட்டம் நடைபெறும்.

சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்

தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள் அழிக்கப்படுவதால் இன்னும் 10 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை வரும் நிலை ஏற்படலாம். தமிழக மக்களும், விவசாயிகளும் ஒவ்வொரு சென்ட் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும்.

பெரிய மாவட்டங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்போம் என சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்

10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து 4 முறை முதல்- அமைச்சரை சந்தித்துள்ளேன். அதேபோல் 6 முறை டாக்டர் ராமதாஸ் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வந்து ஓராண்டாகியும் அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த 10.5 சதவீதத்தை சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வர வேண்டும்.

இது சாதி பிரச்சினை அல்ல, இது சமூக நீதி பிரச்சினை. சமூக நீதி குறித்து நீங்கள் (தி.மு.க.) தான் பேசுகிறீர்கள். இந்த சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கொண்டு வரவில்லை என்றால் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.காளிதாஸ், ஆ.வே.பிரசாத், மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், அ.கணேஷ்குமார், ஆ.வேலாயுதம், மாவட்ட தலைவர்கள் இ.கா.ஏழுமலை, இரா.பரமசிவம், க.ஏழுமலை, கி.கா.சீனிவாசன், வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் மு.பெரியசாமி, கீழ்கரிப்பூர் மாணிக்கம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story