சிறுமியை பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டை விற்பனை- தாயுடன் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது


சிறுமியை பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டை விற்பனை- தாயுடன் கள்ளக்காதலன் உள்பட 3 பேர்  கைது
x
தினத்தந்தி 2 Jun 2022 9:48 PM GMT (Updated: 2022-06-03T10:24:43+05:30)

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ய வைத்த வழக்கில் தாயுடன் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ய வைத்த வழக்கில் தாயுடன் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளத்தொடர்பு

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்தார். அதன்பிறகு ஈரோட்டை சேர்ந்த 40 வயதான பெயிண்டர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் அந்த பெண் குடும்பம் நடத்தி வருகிறார்.

சிறுமியின் தாய் தனியார் ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் அந்த பெண்ணும், கள்ளக்காதலனும் ஜாலியாக வாழ்ந்து வந்தனர்.

தாய் அனுமதி

பின்னர் சிறுமியையும் கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்த அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சிறுமியின் 12 வயதில் இருந்தே கருமுட்டை விற்பனைக்காக சிறுமியை தாயின் கள்ளக்காதலன் தயார் செய்து வந்தார். இதனால் சிறுமிக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். அதன்பிறகு அவர் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். கருமுட்டை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்காக சிறுமியின் தாயும் அதற்கு சம்மதித்து உள்ளார்.

கருமுட்டை விற்பனை

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்கு அவரது வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர். சிறுமியின் தாயும், அவரைப்போல் கருமுட்டை விற்பனை செய்து வரும் ஈரோடு கைகாட்டி வலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாலதியும் (வயது 36) சேர்ந்து சிறுமிக்கு வேறு பெயரில் 1995-ம் ஆண்டு பிறந்ததாக புதிய ஆதார் கார்டு பெற்று உள்ளனர்.

இந்த போலி ஆவணத்தை பயன்படுத்தி ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிறுமியை அவரது தாயும், மாலதியும் அழைத்து சென்று கருமுட்டையை விற்பனை செய்து உள்ளனர்.

இதற்காக கருமுட்டை கொடுத்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் ரூ.20 ஆயிரமும், புரோக்கராக செயல்பட்ட மாலதிக்கு கமிஷனாக ரூ.5 ஆயிரமும் ஆஸ்பத்திரியின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. சிறுமியின் தாயும், அவரது கள்ளக்காதலனும் ஆஸ்பத்திரியில் கொடுக்கப்பட்ட ரூ.20 ஆயிரத்தை பெற்று உள்ளனர். இதேபோல் சிறுமியை மொத்தம் 8 முறை கருமுட்டையை கொடுக்க வற்புறுத்தி உள்ளார்கள். மேலும், கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

சேலத்துக்கு..

இந்தநிலையில் சிறுமிக்கு அவர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததால், மிகவும் மனவேதனை அடைந்த சிறுமி கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறி சேலத்தில் உள்ள தெரிந்தவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறுமி இருப்பதை அறிந்து கொண்ட சிறுமியின் தாயும், அவரது கள்ளக்காதலனும் சேலத்துக்கு சென்று உள்ளார்கள்.

கருமுட்டை விற்பனைக்காக சிறுமியை மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் அழைத்தனர். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த தகவல் அறிந்ததும், சிறுமியின் உறவினர்கள் சேலத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு வந்து, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க செய்தனர். சிறுமி கொடுத்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று கைது செய்தனர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ய வைத்த வழக்கில் தாய், தாயின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story