2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

2 சிறுமிகள்

ஈரோட்டில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 62) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் ஆதரவற்ற இல்ல நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்செல்வது வழக்கம். இதுபோல் இல்லத்தில் தங்கி இருந்த மாணவிகள் வெளி இடங்களுக்கு செல்லும் தேவை இருந்தால் வாகனத்தில் அழைத்து சென்று வருவார். இதனால், குழந்தைகள் அவரை டிரைவர் தாத்தா என்று அன்புடன் அழைத்து அவரை சுற்றி வருவது வழக்கம்.

இப்படி பெண் குழந்தைகள் அவரை சுற்றி வந்ததால், சபலம் அடைந்த அவர், அங்கு தங்கி இருந்து 7-ம் வகுப்பில் படித்து வந்த 13 வயது சிறுமிகள் 2 பேரிடம் தகாத முறையில் பாலியல் சில்மிஷங்கள் செய்யத்தொடங்கினார். தொடர்ந்து சிறுமிகளுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததால், கடந்த 19-9-2019 அன்று அதுபற்றி சிறுமிகள் இல்லத்தின் பொறுப்பாளரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பசுபதியை கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

மேலும் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட டிரைவர் பசுபதிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் செலுத்த உத்தரவிட்டார். மேலும் இன்னும் 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் தலா 3 மாதங்கள் கூடுதலாக ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட அவர், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.5 லட்சம், இன்னொருவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பு அளித்தார். எனவே டிரைவர் பசுபதிக்கு 20 ஆண்டுகள் ஜெயில், ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Next Story