பெண்ணுக்கு வலைவீச்சு
திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). விவசாயியான இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து ஒரு தரகர் மூலம் வரன் பார்த்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை சுப்பிரமணி திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சுப்பிரமணியின் தாயாருக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுப்பிரமணியின் தாயார் அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஊசி போட்டார்
அதன் பின்னர் தேவி தனது கணவர் சுப்பிரமணியிடம், 'உங்கள் தாயார் மற்றும் சகோதரியிடம் கையெழுத்து வாங்கி விட்டு 2 ஏக்கர் நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கல்லுக்கு சென்று வசிப்போம்' என தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி பொங்கலன்று சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார். 'சுப்பிரமணி, எதற்காக ஊசி செலுத்துகிறாய், என்று கேட்ட போது 'காய்ச்சல் குணமாவதற்காக செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
விஷ மருந்து கலந்தது
அந்த ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் சுப்பிரமணி மயக்கமடைந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் சுய நினைவை இழந்தார். இதையடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அப்போது அவரது ரத்தத்தில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக கூறிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து சிகிச்சையளித்தனர். இதையடுத்து, நேற்று அவருக்கு சுய நினைவு திரும்பியது.
பெண்ணுக்கு வலைவீச்சு
அதன்பின் சுப்பிரமணி, தனது மனைவி தனக்கு விஷ ஊசி செலுத்தியதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே சுய நினைவு திரும்பாத வரை சுப்பிரமணியை அருகில் இருந்து கவனித்து கொண்ட தேவி, அவருக்கு சுய நினைவு திரும்பியதும் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்று விட்டார். அவர் வீட்டிற்கும் செல்லாமல் தலைமறைவானார். இது சுப்பிரமணியின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே இது குறித்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேவியை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் எதற்காக கணவருக்கு ஊசி செலுத்தினார், நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவரை கொல்ல முயன்றாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.