விஷம் குடித்த எலக்ட்ரீசியன் சாவு
மூலைக்கரைப்பட்டியில் விஷம் குடித்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
இட்டமொழி:
செய்துங்கநல்லூர் கீழநாட்டார்குளத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 37). எலக்ட்ரீசியன். இவருக்கு மூலைக்கரைப்பட்டி எடுப்பல் ஊரைச் சேர்ந்த பதிபூரணம் (35) என்பவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி கோவில் கொடைக்கு ஊருக்கு செல்வதாக பதிபூரணம் தனது கணவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு பதிபூரணம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மூலைக்கரைப்பட்டிக்கு சென்றுவிட்டார். பின்னர் குருநாதன் மனைவியை தேடி மூலைக்கரைப்பட்டிக்கு வந்ததாகவும், அங்கு மெயின் ரோடு பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாகவும் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருநாதன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.