2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
பட்டிவீரன்பட்டி அருகே, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் வினோத் (வயது35). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சவுமியா (30). இந்த தம்பதிக்கு மிதுலா ஸ்ரீ (8) என்ற மகளும், மித்ரன் (5) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வினோத்துக்கும், சவுமியாவுக்கும் இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சவுமியா, எறும்பு பவுடரை (விஷம்) தண்ணீரில் கலந்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் தானும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிறிதுநேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.