பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா:பூங்கரக பந்தல்கள் அமைக்க கூடுதல் கட்டணம் வசூல் -உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பக்தர்கள் அறிவிப்பு
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூங்கரக பந்தல்கள் அமைக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பூங்கரகம் எடுக்கும் பக்தர்கள் வருகிற 22-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கூடலூர்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூங்கரக பந்தல்கள் அமைக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பூங்கரகம் எடுக்கும் பக்தர்கள் வருகிற 22-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பொக்காபுரம் கோவில் விழா
மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருடாந்திர தேர் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூங்கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டில் வருடாந்திர தேர்த்திருவிழா வருகின்ற 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவிழா காலங்களில் நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பக்தர்கள் பூங்கரகம் வைத்து வழிபடுவதற்காக தற்காலிக பந்தல்கள் அமைப்பது வழக்கம். இதற்காக குறிப்பிட்ட தொகையை பூங்கரக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் திருவிழா இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதால் பூங்கரகம் வைப்பதற்கான தற்காலிக பந்தல்கள் அமைப்பதற்காக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த முன் வந்த நிலையில் தற்காலிக பந்தல்கள் அமைப்பதற்கான அனுமதி பெற பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலை துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியாயமான கட்டணத் தொகை நிர்ணயிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வருகிற 22-ம் தேதி கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என பூங்கரக பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து பூ கரகம் எடுக்கும் பக்தர்கள் கூறியதாவது:-
தற்காலிக பந்தல் அமைப்பதற்கு ரூ.25 ஆயிரம் வரை பணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்கரகம் எடுக்கும் பக்தர்கள் பெரும்பாலானவர்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் ஆவர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களும் உள்ளனர். பல மடங்கு கட்டண உயர்வை கண்டித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை கண்டித்து வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் காலை 11 மணிக்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.