பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு-தர்மபுரி வழியாக சென்ற ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்
தர்மபுரி:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் தர்மபுரி வழியாக சென்ற ரெயில்களில் போலீசார் தொடர் சோதனை நடத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு பணி
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டது. தர்மபுரி ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கோதண்டபாணி, ராமசாமி ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வந்து, செல்லும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரெயில் நிலைய பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
ரெயில்களில் சோதனை
தொடர்ந்து தர்மபுரி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்களில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினா். அப்போது பயணிகளின் பொருட்கள், உடைமைகளை சோதனையிட்டனர்.
இதேபோல் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் போலீசார் தொடர் சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில்வே பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் போலீசாரின் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.