கள்ளத் துப்பாக்கிகளை பொது இடத்தில் வைத்து செல்ல போலீசார் அறிவுரை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளத் துப்பைக்கிகளை ஒழிக்க போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பொது இடங்களில் வைத்து சென்றால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளத் துப்பாக்கிகள்
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1,630 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். 43 மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஒரு சிலர் கள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் கண்காணிக்க படுகின்றனர். மலை கிராமங்களில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொது இடத்தில்
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீசார் ஜவ்வாது மலை கிராமங்களில் சில கிராம தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பொதுவான இடத்தில் அல்லது கோவில்களில் வைத்துவிட்டு சென்றால் அதனை போலீசார் எடுத்து செல்வார்கள். துப்பாக்கியை வைத்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாட்டோம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் நேரடியாக வந்து போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது. சட்டவிரோத ஆயுதங்களை, முக்கியமாக இரட்டை குழல் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என அவர் கூறினார்.