தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலை: சென்னையில் 4 ஆயிரம் போலீசார் ரோந்து


தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலை: சென்னையில் 4 ஆயிரம் போலீசார் ரோந்து
x

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 4 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை,

பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதாக 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ந்தேதி சோதனை நடத்தினார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து கோவையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என 7 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டிலும் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.

டி.ஜி.பி. எச்சரிக்கை

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அலுவலகங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையங்களும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 ஆண்டுகள் தடை

இந்த நிலையில் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதற்கிடையே அந்த அமைப்புக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இதில் 170-க்கும் மேற்பட்டோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் நேரடி கண்காணிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4 ஆயிரம் போலீசார் ரோந்து

சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகம், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய அரசு அலுவலகங்கள் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்களிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 4 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு முடக்கப்பட்டுள்ளதால், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அதன் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story