ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த 3 பேர் கைது
ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்:
வெள்ளி வியாபாரிகள்
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தர் மகன் சாகர் (28), சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விலாஸ் மகன் விக்ராந்த் (30). இவர்கள் 3 பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி வந்து செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளி வியாபாரிகளான சந்தோஷ், விக்ராந்த், சாகர் ஆகிய 3 பேரும் கடந்த 13-ந் தேதி சேலத்தில் இருந்து கார் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று அங்கிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ வெள்ளியை வாங்கிக்கொண்டு சேலம் நோக்கி வந்தனர்.
கொள்ளை
16-ந் தேதி இரவு ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் அவர்களது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்களின் காரை வழிமறித்து, காரில் இருந்த விக்ராந்த், சாகர் ஆகியோரை தாக்கி கீழே இறக்கி விட்டது.
பின்னர் காரின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் காரில் இருந்த 100 கிலோ வெள்ளியை காருடன் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. பின்னர் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே சந்தோசை தாக்கி கீழே தள்ளியதுடன், 100 கிலோ வெள்ளியுடன் தப்பி சென்றது. இது குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் 100 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த கும்பல் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கேரளா பாலக்காடு மாவட்டம் முட்டி குளங்கீரா பகுதியை சேர்ந்த சுரேஷ் (48), கோங்காடு பகுதியை சேர்ந்த நாசர்வுதீன் (38), திருச்சூர் வாகடப்பள்ளி பகுதியை சேர்ந்த மோசின் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 கிலோ வெள்ளி மற்றும் திருட பயன்படுத்திய 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.