தமிழக, ஆந்திர எல்லையோர பகுதிகளில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. அதிரடி ஆய்வு
தமிழக, ஆந்திர எல்லையோர பகுதிகளில் இருந்து எரிசாராயம், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவதாக வந்த புகாரையடுத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தலைமையில் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு எல்லையான பள்ளிப்பட்டு வழியாக கள்ளச்சாராயம், எரி சாராயம், கஞ்சா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறை சார்பில் சோதனைகள் நடைபெற்றாலும் கடத்தி வருவது தொடர் கதையாக தான் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர்.
ஏ.டி.ஜி.பி.ஆய்வு
இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய தாலுகா பகுதிகளில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. சங்கர் தலைமையில் திருவள்ளுர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் மற்றும் 2 டி.எஸ்.பி.க்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 70 போலீசார் 6 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
பள்ளிப்பட்டு தாலுகாவில் திருமலராஜூப்பேட்டை, ஆர்.கே.பே ட்டை தாலுகாவில் காட்டூர், நேசனூர், பெரிய நாகப்பூண்டி, அய்யன் கண்டிகை கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேபோல் எல்லையோர பகுதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம், எரி சாராயம் கடத்தி வரப்படுகிறதா? என்பதையும் வயல்களில் யாரேனும் எரி சாராயத்தை கள்ளச்சாராயமாக மாற்றி வருகிறார்களா? அல்லது ஆந்திராவில் இருந்து கடத்தி வரும் கள்ளச்சாராய த்தை யாரேனும் பதுக்கி வைத்திருக்கினரா? என்பதையும் ஆய்வு செய்தனர். இதனால் தமிழக ஆந்திர எல்லையோர பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.