தேனியில் மோட்டார் சைக்கிளில் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் சாலை பாதுகாப்பு குறித்து மோட்டார் சைக்கிளில் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
தேனியில் போலீஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட போலீசார் தலைக்கவசம் அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.
தேனி நேரு சிலை சிக்னலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கம்பம் சாலை வழியாக பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் சென்று, அங்கிருந்து திரும்பி தேனி நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, அரண்மனைப்புதூர் விலக்கு, புதிய பஸ் நிலையம், அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம், பெரியகுளம் சாலை வழியாக மீண்டும் நேரு சிலை சிக்னலில் நிறைவு பெற்றது.
இதில், தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, மாயா ராஜலட்சுமி, பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.