கைதான 2 பேரின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 பேரின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 பேரின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி இரவு இவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் மண்எண்ணெய் குண்டு வீசி விட்டு சென்று விட்டனர். இது குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த சையத்அலி (42), பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த காதர்உசேன் (33) ஆகிய 2 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதையடுத்து இந்த வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரின் வீடுகளில் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஒரு குழுவினர் சையத்அலி வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அதே போன்று இன்ஸ்பெக்டர் செல்வமீனாட்சி தலைமையிலான மற்றொரு குழுவினர் காதர் உசேன் வீட்டில் சோதனை நடத்தினர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். சோதனை நடைபெற்றதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 2 இடங்களிலும் போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.