ஆங்கில புத்தாண்டையொட்டிமாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனைமதுபாட்டில்கள், சாராயம் பறிமுதல்
ஆங்கில புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலூரில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட அரசும், காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணிக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பிச்சாவரம் சுற்றுலா மையம் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
வாகன சோதனை
இதுதவிர மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 20 மதுபாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக 3 பேர் மீது கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.