வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு குறித்து வட மாநில தொழிலாளர்களுடன் போலீஸ் கமிஷனர் சந்திப்பு
வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு குறித்து வட மாநில தொழிலாளர்களுடன் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நேற்று வடமாநில தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா கலந்து கொண்டு சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வசிக்கும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வடமாநில தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
குறைகளை தெரிவியுங்கள்
இந்த கூட்டத்தில், போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக இந்தி பேசும் அதிகாரியை நியமித்துள்ளோம். சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்டனர். அது உங்களுக்கு தெரியுமா? எந்த குறைகள் மற்றும் பிரச்சினையாக இருந்தாலும் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் செய்யும் வேலையை தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல்களை தெரிவியுங்கள். நீங்கள் அனைவரும் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு முழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பாக இருக்கிறோம்
இதையடுத்து பணிபுரியும் மற்றும் வசிக்கும் இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூட்டத்தில் பேசிய வடமாநில தொழிலாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், அசோகன், ஆனந்தி, லட்சுமி பிரியா, சரவணக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.