மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி - போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்


24 மணி நேரமும் இயங்கும் வகையில் மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடிகளை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

மதுரை


24 மணி நேரமும் இயங்கும் வகையில் மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடிகளை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

சூரிய சக்தியில் இயங்கும் சோதனை சாவடி

மதுரை நகருக்குள் வருவதற்கு 17 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மின்தடை ஏற்படும் போது கேமரா உள்ளிட்ட மின்சாரத்தில் இயங்கும் எல்லா செயல்பாடுகளும் தடைபடும். அந்த நேரத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தடுக்க சூரிய சக்தியில் இயங்கும் (சோலார் மின் வசதியுடன்) சோதனை சாவடியாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

24 மணி நேரமும் கண்காணிக்கலாம்

அதன்படி நகரில் முதல் முறையாக அவனியாபுரம் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்டேலா நகர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் சூரிய சக்தியில் இயங்கும் சோதனை சாவடியாக உருவாக்கப்பட்டது. அதனை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் துணை கமிஷனர்கள் சீனிவாசபெருமாள், ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறும் போது, மதுரை நகரில் உள்ள 17 இடங்களில் இதே போன்று சோதனை சாவடிகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் மின்தடை இல்லாமல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியும். மேலும் இங்கு நிறுவப்பட்டுள்ள 360 டிகிரி கேமரா மூலம் அதன் காட்சிகளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.

மொபைல் பூத்

இது தவிர நகரில் மீனாட்சி அம்மன், கூடலழகர், தல்லாகுளம் கோவில்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பது போன்று மற்ற கோவில்களில் கேமரா அமைக்க உள்ளோம். அதே போன்று சிலைகள் உள்ள பகுதிகளிலும் கேமரா அமைக்கப்படும். இது தவிர சோலார் மின்வசதியுடன் நடமாடும் போலீஸ் கண்காணிப்பு அறை (மொபைல் பூத்) உருவாக்கப்படுகிறது. இதனை வாகனத்தில் இணைந்து தேவையான பகுதிகளுக்கு கொண்டு சென்று கண்காணிப்பு கேமரா மூலம் அறையில் உள்ள டி.வி.மூலம் கண்காணிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story